வாசகர்களின் ரசனை அறிந்தவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை எழுத்தாளர் மாலன் புகழாரம்
சென்னை:''வாசகர்களின் ரசனையை அறிந்து, அதற்கேற்ப குமுதம் இதழை நடத்தியவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை,'' என, எழுத்தாளர் மாலன் பாராட்டினார். 'மதுரத்வனி' அமைப்பின் சார்பில், மயிலாப்பூர் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில், 'அழியாத ரேகைகள்' என்ற தலைப்பில், 'பத்திரிகை உலக முன்னோடிகளின் வாழ்வும் பணியும்' குறித்த, மூன்றாவது நிகழ்ச்சி நேற்று நடந்தது. சாதனை
இதில், எஸ்.ஏ.பி.அண்ணாமலை குறித்து, எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் பேசியதாவது:ஒரு வங்கி அதிகாரி, தன் உதவியாளரை உதாசீனப்படுத்தியதால், குமுதம் இதழை துவக்கியவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை. அவர், வழக்கறிஞருக்கு படித்து பயிற்சி பெற்ற போதும், அந்த தொழிலில் ஆர்வம் இல்லாததால், தனக்கு பிடித்த படிப்பு, எழுத்து சார்ந்த துறையில், ஈடுபட திட்டமிட்டதும் ஒரு காரணம். அந்த காலகட்டத்தில், புதுக்கோட்டை பகுதியில் இருந்து, பல்வேறு சிறுவர் இதழ்கள் வந்தன. அவை சிறிது காலத்திலேயே நின்றும் போயின. அப்போதெல்லாம், வெளியிடப்படும் இதழ்களை, முகவர்கள் வாயிலாகவே கடைகளில் சேர்க்க வேண்டும். அதற்காக ஏஜென்டுகள் முன்பணம் கட்ட வேண்டும். புதிய பத்திரிகைகளும், இதழ்களும், பல்வேறு காரணங்களால் நின்று போகும்போது, முகவர்கள் தான் பாதிக்கப்படுவர். அப்படிப்பட்ட சூழலில், முதலில் 2,000 பிரதிகளை அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பினார். அப்போது அவருக்கு வயது 23. அதனால், முகவர்கள், அவற்றை பெறவும், சந்தா தரவும் தயங்கினர். அப்போது, தன் பெரியப்பா, அழகப்ப செட்டியாரின் அனுமதியோடு, அவரை கவுரவ ஆசிரியராக நியமித்து, 5 லட்சம் பிரதிகள் வரை விற்பனை செய்து சாதித்தார்.பொதுவாக, பத்திரிகை ஆசிரியரின் கருத்தியல் சார்ந்து எழுதுவது, வாசகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப எழுதுவது, இரண்டும் கலந்து எழுதுவது என, மூன்று வித பத்திரிகைகள் இருக்கும். அதில், குமுதம் இதழ் வாசகர்களுக்காக எழுதப்பட்டது. மரியாதை
எஸ்.ஏ.பி.அண்ணாமலை, நான்கு முழ வேட்டியும், அரைக்கை சட்டையும் அணிந்து, பொதுமக்களுடன் கலந்து, அவர்களின் கருத்துகளை அறிந்து செயல்பட்டார். அவர் எப்போதும், எல்லோரிடமும் மரியாதையாகப் பழகினார். 'ஏய், டேய்' என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதே இல்லை. அவர் இருந்த வரை, அவர் தான், 'அரசு பதில்கள்' பகுதியை எழுதினார். அவர், பிரார்த்தனை மீது நம்பிக்கை கொண்டவராகவும், புதிய விஷயங்களை வரவேற்பவராகவும் இருந்தார். திரைப்பட விமர்சனத்திலும், சிறு நிறுவனங்கள், புதிய இயக்குநர்கள், நாயக, நாயகியரை தாக்கி எழுதக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார்.இவ்வாறு அவர் பேசினார்.