சவரன் ரூ.58,000த்தை தாண்டியது இதுவரை கண்டிராத உச்சம்
சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஆபரண தங்கம் சவரன் விலை 58,000 ரூபாயை தாண்டியது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன், 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 58,000 ரூபாயை தாண்டி, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த 10 மாதங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 10,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:கடந்த ஓராண்டில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, 41 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. வெள்ளி மீது முதலீடு செய்தவர்கள், 54 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளனர். இது, தங்கம், வெள்ளியில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் சில நாடுகளில் நடக்கும் போர் முடிவுக்கு வராதது, உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலக முதலீட்டாளர்கள் அதிக லாபம் கிடைத்ததாலும், பாதுகாப்பு கருதியும், தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பால், கடந்த 20 நாட்களில் மட்டும் உலக சந்தையில், 31.10 கிராம் அவுன்ஸ் தங்கம் விலை 8,400 ரூபாய் உயர்ந்து, 2.28 லட்சம் ரூபாயாக உள்ளது. வரும் நாட்களில் மேலும் தங்கம் விலை உயரும். வெள்ளி விலையும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.