உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அறிவியல் பூர்வமான ஆவணங்கள்

 அறிவியல் பூர்வமான ஆவணங்கள்

மாணவி கொலை வழக்கு கடந்து வந்த பாதை குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொலை வழக்கில் சூழ்நிலைகள் குறித்து எந்த தடயமும் முதலில் கிடைக்காததால், வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அறிவியல் பூர்வமாக, 98 கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். 2,574 மொபைல் போன் அழைப்புகளை கண்காணித்து விசாரணை நடத்தினோம். கிராமத்தில் உள்ள, 461 பேரிடம் நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் தனித்தனியே விசாரணை நடத்தினோம். சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தோம். மாணவியின் பிரேத பரிசோதனையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளும், கைதான தர்ம முனீஸ் வரனிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரி மூலம் நடத்தப்பட்ட 'டிஎன்ஏ' சோதனையில் கிடைத்த முடிவுகளும் ஒத்து போனது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்தோம். விரிவான விசாரணைக்கு பிறகு, 21 நாட்களில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். விசாரணை நடவடிக்கைகள், 54 நாட்களில் முடிக்கப்பட்டன. இந்த தீர்ப்பு, குற்றவியல் நீதி அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வர் விஜய் வரவேற்பு

'பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் நடவடிக்கைகளுக்கு, உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இரட்டை துாக்கு தண்டனை தீர்ப்பு வரவேற்கத்தக்கது' என முதல்வர் விஜய் கூறியுள்ளார். அவரது அறிக்கை: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பிளஸ் 2 படித்த மாணவி, வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு, துாத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள், மிக துரிதமாக நீதி வழங்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும், அரசின் நடவடிக்கைகளுக்கு, உற்ற துணையாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை