உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; காசுக்கு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி; சாபமிடுகிறார் சீமான்

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; காசுக்கு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி; சாபமிடுகிறார் சீமான்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கலந்தாய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: அரசியலை வியாபாரம் ஆக்கக் கூடாது. கொள்கையற்ற அரசியல் கோழைத்தனம். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி. நெடுங்காலமாக தேசத்துரோக குற்றத்தைத் தான் செய்து வருகிறோம். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, தேர்தல் ஆணையமும் பொருட்படுத்துவதில்லை. தேர்தல் ஆணையம் அமைக்கும் பறக்கும் படை, பணம் கொடுக்கும் கட்சிக்காரர்களை பிடிப்பதில்லை; மளிகை கடை செல்வோரையும், மருத்துவமனைக்கு பணம் கொண்டு செல்வோரையுமே பிடிக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு, 50 கோடி ரூபாய், சட்டசபை தேர்தலுக்கு 15 முதல் 20 கோடி ரூபாய் என செலவு செய்து, வெற்றி பெறும் ஒருவர், போட்ட பணத்தை எடுக்கும் நோக்கில் தானே செயல்படுவார். புதிய கட்சிகள் துவங்குவோர், ஏற்கனவே உள்ள கட்சிகளின் கொள்கைகள் பிடிக்காமல் தான் மாற்று என வருகின்றனர். பின், அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்கின்றனர். மது ஒழிப்பு மாநாடு நடத்திய வி.சி., தலைவர் திருமாவளவன், மீண்டும் ஆளுங்கட்சியுடனே கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த மாநாட்டின் பயன் என்ன? நாங்கள் கூட்டணிக்கு காத்திருப்பதில்லை. தேர்தலில், 10.5 சதவீத ஓட்டுகளை வைத்திருந்த விஜயகாந்த், கூட்டணி வைத்ததால் என்ன ஆனார் என்பதை அனைவரும் பார்த்தோம். எனவே, எக்காரணம் கொண்டும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்; 234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

oviya vijay
நவ 07, 2025 11:32

பாவிகள் மன்னிக்க படுவார்கள். பாவ மனிப்பு கெடைக்கும். மறுபடியும் அடுத்த தேர்தல் வரைக்கும்...பின்னர் மறுபடியும் பாவ மன்னிப்பு...