தமிழக அரசு பிடிவாதம் கைவிட சீமான் வலியுறுத்தல்
சென்னை:'கிராம சுகாதார செவிலியருக்கான, சிறப்பு பயிற்சி பெற்ற, 2,400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியர்களாக நியமிக்க வேண்டும்,' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:அங்கன்வாடி மைய ஊழியர்கள், அங்கன்வாடி பணிகளோடு, கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணியருக்கு உதவுவது, பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவுவது, குழந்தைகள் நல மேம்பாடு உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இப்பணியில், கிராமப்புற செவிலியர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். எனவே, ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், அங்கன்வாடி ஊழியர்களை, அரசு தேர்வு செய்து, 2 ஆண்டுகள் கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்பு பயிற்சியை வழங்கியது.பயிற்சி முடித்த, அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் பணி நியமனத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியர்களாக நியமிப்பது நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, இனி நேரடி நியமனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதனால், 2019ம் ஆண்டு கிராம சுகாதார செவிலியர்களாக பயிற்சி பெற்ற, 2,400 அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்காலம் இருண்டு போயுள்ளது. அவர்களின் அங்கன்வாடி பணி வாயிலாக கிடைக்கக்கூடிய வருமான உயர்வு, பதவி உயர்வு ஆகியற்றை இழந்துள்ளனர். தமிழக அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, செவிலியர் பயிற்சி பெற்ற, 2,400 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி, உடனடியாக கிராம சுகாதார செவிலியராக நியமித்து, அரசாணை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.