மதுரை மக்கள் சர்க்கஸ் சாகசம் அரசை கிண்டலடித்த செல்லுார் ராஜு
சென்னை:''மதுரையில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், மக்கள் சர்க்கஸ் சாகசம் செய்து வருகின்றனர்,'' என, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., செல்லுார் ராஜு பேசினார். சட்டசபையில் நடந்த விவாதம்: செல்லுார் ராஜு: மதுரை மாநகரில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரண்டு முக்கிய மேம்பால பணி நடக்கிறது. மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால், சாலைகள் குண்டும், குழியுமாக மாறி கிடக்கின்றன. சாலைகளில் சாக்கடை நிறைந்து கிடக்கிறது. முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு உள்ளதால், பரீட்சார்த்த முறையில் நடவடிக்கை எடுப்பதால், தண்ணீர் ஆறாக ஓடுகிறது. மதுரை மக்கள் சாலைகளில் சர்க்கஸ் சாகசம் செய்ய வேண்டியுள்ளது. மதுரை மக்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? அமைச்சர் எ.வ.வேலு: 10 ஆண்டுகளாக விடிவு காலம் இல்லை. இதனால், விடிவுகாலம் ஏற்படுத்த, மதுரைக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்துள்ளார். செல்லுார் ராஜு அமைச்சராக இருந்தவர். நகரப்பகுதியை சேர்ந்தவர். அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சாலையில் சென்று வருவதற்கு சங்கடமாக இருக்கிறது என்று சொன்னார். நான் மதுரை சென்ற போது, அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., தளபதியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றேன்; ஆனால், அவர் அங்கு இல்லை. பங்களா கட்டி பண்ணை வீட்டில் இருப்பதாக சொன்னார்கள். கோரிப்பாளையம் பாலம் என்பது, 100 ஆண்டு கால கோரிக்கை. பலமுறை பேச்சு நடத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜனவரி மாதம் திறக்க திட்ட மிட்டுள்ளோம். அப்பல்லோ மருத்துவமனை மேம்பாலத்தை, நவம்பர் மாதம் திறக்க பணி நடக்கிறது. வைகை வடகரை முதல் பாத்திமா கல்லுாரி வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்தால் மதுரையில் நெரிசல் குறையும். தி.மு.க., - பூமிநாதன்: நெல்பேட்டை முதல் விமான நிலையம் வரை செல்வதற்கு தெற்குவாசல் பாலம் கட்டப்படும் என, முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது; அது எந்த நிலையில் உள்ளது? அமைச்சர் வேலு: சட்டசபையில் அறிவித்த பின், அந்த இடத்தை சென்று பார்த்தோம். சுற்றிலும் ஏராளமான கட்டடங்களை இடிக்க வேண்டி இருந்தது. இதனால், நில எடுப்புக்கு மட்டும் பல கோடி ரூபாய் தேவைப்படும். தேரோடும் வீதி என்பதால், மேம்பாலம் கட்டினால் ஆன்மிக பக்தர்கள் வருத்தப்படுவர். எனவே, பாலம் கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கிறோம். குறிப்பிட்ட சில சந்திப்புகளில் மட்டும் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.