பின்வாசல் வழியாக வெளியேறினார் செங்கோட்டையன்
சென்னை:சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், பின்பக்க நுழைவாயில் வழியாக வெளியேறினார். 'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் போர்க்கொடி துாக்கினார். இது தொடர்பாக, டில்லி சென்று பா.ஜ., மூத்த தலைவர்களையும் சந்தித்தார். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியின் பிரசார கூட்டத்தையும் புறக்கணித்தார். இதையடுத்து, அவர் வகித்து வந்த மாநில அமைப்பு செயலர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர் பதவிகள், அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன. அவரது இணைப்பு முயற்சிகள் பலனிக்கவில்லை. அவரது ஆதரவாளர்களாக இருந்த எம்.எல்.ஏ.,க்களும், அவரிடம் இருந்து ஒதுங்கியுள்ளனர். இந்நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, செங்கோட்டையன் வந்தார். சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும், சபாநாயகர் அறை உள்ள பின்பக்க நுழைவாயில் வழியாக, தனியாக வெளியேறினார்.