கொலை வழக்கில் ஒடிசா நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்பு
சென்னை:கோவை அன்னுார் அருகில் செங்காட்டுதோட்டத்தில் வசித்தவர் சிவசாமி; நடைபயிற்சி முடித்த பின், வீட்டு தோட்டத்தின் முன் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தோட்டத்துக்குள் ஒருவர் நுழைவதை பார்த்தார். அவரிடம் விசாரணை நடத்தினார். அதற்கு, அவர் ஹிந்தியில் பதில் அளித்தார். பின், அவரை வேறொரு இடத்துக்கு அழைத்து சென்று விட்டு விட்டு, வீடு திரும்பினார். பின்தொடர்ந்து வந்த அந்த நபர், தென்னை மட்டையால் தலையில் தாக்கியதில் சிவசாமி இறந்தார்.சம்பவம் தொடர்பாக, பினோஜ்யக்கா என்பவரை, அன்னுார் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர், ஒடிசா மாநிலத்தில் உள்ள குந்துரா கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வழக்கை விசாரித்த கோவை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், ஒடிசா வாலிபர் பினோஜ்யக்காவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, 'கொலை செய்யப்பட்டவருக்கும், கொலையாளிக்கும் இடையே எந்த முன்விரோதமும் இல்லை; அதனால், திட்டமிட்டு இந்த கொலை நடக்கவில்லை. கொலைக்கான உள்நோக்கம் எதையும், அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. எனவே, தண்டனையில் மாற்றம் செய்து, ஐந்தரை ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளது.