அறநிலையத்துறைக்கு தனி பட்ஜெட்: பா.ஜ., கோரிக்கை
சென்னை:'ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு, தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறை கீழ், பல்லாயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. தினமும் லட்சக்கணக்கான மக்கள், கோவில்களில் தரிசனம் செய்கின்றனர். எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை தொடர்பான, வரவு - செலவு கணக்குகள் உள்ளிட்ட விபரங்களை, தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும்.கோவில் யானைகளுக்கு, முதுமலையில் மீண்டும் புத்துணர்ச்சி முகாம் நடத்த வேண்டும்; கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு சட்டக்கல்லுாரி அமைக்க வேண்டும்; வழக்கறிஞர் சேமநல நிதியை, 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்.குற்றங்களை கட்டுப்படுத்த, புதிய போலீஸ் நிலையங்களை, உருவாக்க வேண்டும். கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியில், 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அங்கு, கடல்நீரைகுடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.