| ADDED : ஜூன் 15, 2024 10:38 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் மூன்றாவது முறை எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சௌந்தர பாண்டியன். மூத்த அமைச்சர் நேருவின் ஆதரவாளராக இருந்த இவர் கடந்த சில மாதங்களாக பெரும்பாலும் அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதில்லை. இந்நிலையில், லால்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் நேரு பார்வையிட்டார். இந்த நிகழ்வு பற்றிய தகவல் அமைச்சர் நேருவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத எம். எல்.ஏ., சௌந்தரபாண்டியன் என்ற பெயரில் உள்ள முகநூல் ஐ.டி.,யில் இருந்து, அமைச்சரின் பதிவு இடம் பெற்றதற்கு கீழே, 'லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது,' என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார்.இந்த சம்பவம் தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.