தமிழகத்தில் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு புள்ளி விபரங்களில் அதிர்ச்சி தகவல்
கரூர்: தமிழகத்தில், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் வலுவாக இருந்தும், 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ல் கூடுதலாக, 1.50 லட்சம் பேர் இறந்துள்ளனர்.தமிழக அரசு பொது சுகாதாரத்துறையின், பிறப்பு, இறப்பு பதிவு இணையதளத்தில் உள்ள புள்ளி விபரங்களின்படி, 2018ல் தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 5 லட்சத்து, 45,255 பேர். ஆனால், 2024ம் ஆண்டில், 6 லட்சத்து, 95,680 பேர் இறந்துள்ளனர். அதாவது, 2018ஐ விட, 2024ல், கூடுதலாக, 1 லட்சத்து, 50,425 பேர் உயிரிழந்துள்ளனர். நம்நாட்டில் விபத்துகள் மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை உத்தர பிரதேசத்தில் அதிகமாக உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் தான் விபத்துகளில் அதிகம் பேர் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் போதை பழக்கம். விபத்து மட்டுமின்றி, போதை பழக்கத்தாலும், கல்லீரல் உட்பட பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். கொரோனாவுக்கு பின், இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதை ஆராய வேண்டி உள்ளது. கரூர் உட்பட பல்வேறு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், நரம்பியல், இதயம் உள்பட அவசர சிகிச்சை தேவைப்படும் முக்கிய பிரிவுகளில் டாக்டர்கள் கிடையாது. அதேபோல, செவிலியர்களும் குறைவாக உள்ளனர். பல ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் தலா ஒரு டாக்டர் தான் உள்ளனர். அதிலும், 24 மணி நேரம் விபத்து சிகிச்சை, அவசர சிகிச்சை, பிரேத பரிசோதனை, பிரசவம் போன்ற பணிகள் பார்க்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில், ஒரு டாக்டர் மட்டுமே உள்ளதால், சிரமப்பட வேண்டியுள்ளது. இறப்பு அதிகரிப்புக்கு, இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது காரணமாக இருந்தாலும், இளம், நடுத்தர வயது மரணம் குறிப்பிட்டத்தக்க அளவில் உயர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.