டாக்டர் பற்றாக்குறையை பேசக்கூடாதா ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கண்டனம்
சென்னை:துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில், டாக்டர்கள் பற்றாக்குறை பற்றி பேசக் கூடாது என கூறியுள்ள, தேசிய நலவாழ்வு குழும நிர்வாக இயக்குனருக்கு, டாக்டர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:மகப்பேறு இறப்பு குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில், அனைத்து மருத்துவ கல்லுாரி முதல்வர்கள், மகப்பேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர்.அப்போது, தேசிய நலவாழ்வு குழும நிர்வாக இயக்குனர் அருண் தம்புராஜ், மருத்துவ கல்வி இயக்குனர், கல்லுாரி முதல்வர்கள், மகப்பேறு பேராசிரியர்களை அவமதிக்கும் வகையில் பேசியது, டாக்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து பேசியதும், அதுகுறித்து பேசக் கூடாது என அவர் எச்சரித்ததை, நாங்கள் கண்டிக்கிறோம். தமிழக சுகாதாரத் துறை வலுவான கட்டமைப்புடன், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.இதற்கு அரசு ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம், 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டாக்டர்களின் உழைப்பும், தியாகமும் தான்.டாக்டர்களை அங்கீகரிக்க மனம் இல்லை என்றாலும், கொச்சைப்படுத்த வேண்டாம். தேசிய அளவை விட, மகப்பேறு மரணம் தமிழகத்தில் குறைவாக இருப்பதற்கு, ஒட்டுமொத்த மருத்துவ பணியாளர்களும் காரணம்.எனவே, அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாக்டர்கள் குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இரவு, பகலாக டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.போதிய டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருததுவ பணியாளர்களை நியமிக்காமல், ஆய்வு கூட்டம் நடத்துவது எந்த வகையிலும் பயனளிக்காது. எனவே, முதல்வர் தலையிட்டு, டாக்டர்களை அவமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.