உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திராவில் வெடி மருந்து பதுக்கல் சித்திக், அலி மீண்டும் கைது

ஆந்திராவில் வெடி மருந்து பதுக்கல் சித்திக், அலி மீண்டும் கைது

சென்னை: பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் ஆந்திராவில் பதுங்கி இருந்த வீட்டில், 30 கிலோ வெடி மருந்தை பறிமுதல் செய்துள்ள அம்மாநில போலீசார், இருவரையும் மீண்டும் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக், 59. இவர், 1995ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு சதி திட்டம் தீட்டியவர். கடந்த 1998ல் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, 1999ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட, சென்னை, கோவை, திருச்சி மற்றும் கேரள மாநிலத்தில் ஏழு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்குகள் உட்பட பல வழக்குகளில் முக்கிய குற்றவாளி. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது அலி, 48, மீது, 1999ல் தமிழகம் மற்றும் கேரளாவில், ஏழு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த வழக்குகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த இவர்களை, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், கடப்பா அருகே, தமிழக காவல் துறையின், ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஜூலையில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த வீட்டில், அம்மாநில போலீசார், 30 கிலோ வெடி மருந்துகள், 'டிஜிட்டல்' மற்றும் போலி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோரை நேற்று மீண்டும் கைது செய்து, அம்மாநிலத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ