உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்களுக்கு அபராதம்

போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்களுக்கு அபராதம்

சென்னை:போலி ஆவணங்கள் தயாரித்து, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்த, தென்காசி மாவட்டம், சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் உட்பட 16 பேருக்கு தலா, 30,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் சாலையில், 'தமிழ்நாடு ரியல் எஸ்டேட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு, 45 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, தங்களின் குடும்ப சொத்து என்று கூறி, 2006ல் சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் ராணி பாலகுமாரி நாச்சியார் உள்ளிட்டோர் இணைந்து, போலி ஆவணங்களை தயாரித்து, சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த சுலைமான் கான் என்பவருக்கு, பொது அதிகாரம் வழங்கி உள்ளனர்.பின், அந்த நிலத்தை, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவரின் பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, சுலைமான் கான், நசீர் ஆகியோர், தனியார் நிறுவன உரிமையாளரை மிரட்டி உள்ளனர்.போலி ஆவணங்கள் தயாரித்து, நிலம் அபகரிப்பு செய்யப்பட்டது குறித்து அறிந்த தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாகி சேஷன், 2006 செப்., 7ல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.விசாரணை நடத்திய போலீசார், போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்களான ராணி பாலகுமாரி நாச்சியார், உஷாராணி, உதயபானு உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்களில் ஒருவரான ஜெய்ராணி இறந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.மற்றவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி என்.கோதண்டராஜ், சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் 14 பேர் உட்பட 16 பேருக்கு, தலா 30,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தொகையில் இருந்து, 2 லட்சத்து 40,000 ரூபாயை இழப்பீடாக, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு வழங்கவும், அபராத தொகையை கட்ட தவறினால், இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !