உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டண உயர்வை கைவிட குறுந்தொழில் சங்கம் கடிதம்

மின் கட்டண உயர்வை கைவிட குறுந்தொழில் சங்கம் கடிதம்

சென்னை: 'தொழில்களை பாதுகாத்திட, மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை ஏற்று, மின் வாரியம் 2022ல் சிறு, குறுந்தொழில் முனைவோர் பயன்படுத்தும் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. குறிப்பாக, நிலை கட்டணத்தை 430 சதவீதம் உயர்த்தியதால், தொழில்களின் உற்பத்தி செலவில் பெருந்தொகையை, மின் கட்டணமாக செலுத்தும் நிலைக்கு தொழிற்சாலைகள் தள்ளப்பட்டுள்ளன. பின், ஆண்டுக்கு 6 சதவீதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வு செய்து வருவதால், சிறு, குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து உயர்த்தப்படும் மின் கட்டண உயர்வால் ஏற்படும் கடும் பாதிப்பில் இருந்து தொழில்களை பாதுகாக்க, வரும் ஜூலை முதல் உயர்த்தப்பட உள்ள கட்டண உயர்வை கைவிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும், 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, குறைந்த மின் கட்டணம் வரும் வகையில், '3பி' பிரிவில் இருந்து, '3ஏ1' பிரிவுக்கு மாற்றி தர மின் வாரியத்திற்கு உத்தரவிட்டும், இதுவரை மாற்றி கொடுக்கவில்லை. இதை மாற்றி வழங்க ஆணை பிறப்பித்து, தொழில்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ