மேலும் செய்திகள்
மத்திய அரசின் மானியத்தை வருமானமாக கருத முடியாது
11 minutes ago
சென்னை,: அடுக்குமாடி வீடு வாங்குவோர், 2023 நவ., 30க்குள் கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்தவர்கள், அதற்கான செலவை கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யும்போது ஈடு செய்து கொள்ளலாம் என, பதிவுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை செய்யும்போது, கட்டுமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். வீடு மதிப்பில், 3 சதவீத தொகை செலுத்தி, ஆவணம் பதிவு செய்யப்படும். இதன்பின், அந்த வீட்டுக்கான யு.டி.எஸ்., எனப்படும் நிலத்தின் பிரிபடாத பங்கு விற்பனைக்கான பத்திரம் பதிவு செய்யப்படும். இவ்வாறு இரண்டு முறை பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டு, கூட்டு மதிப்பு அடிப்படையில் வீடு விற்பனை பதிவு செய்யப்படும் என, 2023 நவம்பரில் பதிவுத் துறை அறிவித்தது. இந்த புதிய திட்டம், 2023 டிச., 1ல் அமலுக்கு வந்தது. இதன்படி, கட்டுமான ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டியதில்லை என, அறிவிக்கப்பட்டது. நிலம் மற்றும் கட்டடத்துக்கான மதிப்புகள் சேர்த்து, கூட்டு மதிப்பு அறிவிக்கப்பட்டது. கூட்டு மதிப்பு அடிப்படையிலேயே வீடு விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த, 2023 நவ., 30 வரை, ஏராளமானோர் கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்திருந்தனர். இதற்காக பணி மதிப்பில், 3 சதவீத தொகையை செலுத்தி உள்ளனர். தற்போது கூட்டு மதிப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யும்போது, ஏற்கனவே செய்த செலவு கணக்கில் வராத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், பதிவுத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு: கடந்த 2023 டிச., 1 முதல் கூட்டு மதிப்பு அடிப்படையில், அடுக்குமாடி வீடு விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப் படுகின்றன. இதில், 2023 நவ., 30 வரை கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்தவர்கள் இருந்தால், அவர்கள் ஏற்கனவே செலுத்திய தொகையை, தற்போதைய பதிவின்போது கழித்துக் கொள்ளலாம். இதனால், ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணங்கள் போக மீதி தொகையை, அவர்கள் பத்திரப்பதிவில் செலுத்த வேண்டும். இதற்கான அரசாணையை, பதிவுத் துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பிறப்பித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, 'கிரெடாய்' அமைப்பின் தேசிய துணை தலைவர் எஸ்.ஸ்ரீதரன் கூறியதாவது: கடந்த, 2023ல் வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், சொத்து மதிப்பில் 3 சதவீத தொகையை செலுத்தி, கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்தனர். இவர்கள், கூட்டு மதிப்பு அடிப்படையில் வீட்டுக்கான பத்திரம் பதிவு செய்யும்போது, ஏற்கனவே செய்த செலவு ஏற்கப் படாமல் இருந்தது. இது குறித்து, அரசிடம் தொடர்ந்து முறையிட்டோம். இதன்படி, 2023 நவ., 30க்குள் கட்டுமான ஒப்பந்தம் மேற்கொண்டு, தற்போது கூட்டு மதிப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யும்போது, கட்டுமான ஒப்பந்த பதிவு தொகையை ஈடு செய்ய, அரசு அனுமதித்துள்ளது. வீடு வாங்கியவர்களின் பிரச்னைகளுக்கு பெரிய நிவாரணமாக, அரசின் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
11 minutes ago