உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடையை மீறி போராட்டம் நடத்திய சவுமியா கைது: அன்புமணி கண்டனம்

தடையை மீறி போராட்டம் நடத்திய சவுமியா கைது: அன்புமணி கண்டனம்

சென்னை:பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்று தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா உள்ளிட்ட பா.ம.க., மகளிரணியினர் கைது செய்யப்பட்டனர்.அண்ணா பல்கலை வளாகத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், பா.ம.க., மகளிரணி சார்பில், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. பா.ம.க.,வினரை கைது செய்ய, வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்த வேன், கார்களில் வந்த பா.ம.க.,வினரை கைது செய்து, பஸ்களில் அழைத்துச் சென்றனர்.ஆர்ப்பாட்டத்திற்காக காலை 10:30 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகே பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா வந்தார். அவரது காரை சூழ்ந்த போலீசார், 'ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை' என தெரிவித்தனர். ஆனாலும், அவர் காரை விட்டு இறங்கி போராட்டம் நடத்த முயன்றார். அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து, வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது, தி.மு.க., அரசையும், காவல் துறையினரையும் கண்டித்து, பா.ம.க.,வினர் கோஷமிட்டனர்.சவுமியா அளித்த பேட்டி:தமிழகத்தில் எந்த வயதாக இருந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வேண்டாம்; பாதுகாப்புதான் வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுவதில்லை. அநீதிகளை கண்டித்து, அமைதி வழியில் போராட அனுமதிப்பதுதான் ஜனநாயகம். ஆனால், தி.மு.க., அரசு ஜனநாயக போராட்டங்களை முடக்க நினைக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை, பா.ம.க., போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்ட சவுமியா, பா.ம.க., பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர், தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர். பா.ம.க., போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அன்புமணி கண்டனம்

சவுமியா கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரது கணவரும் பா.ம.க., தலைவருமான அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு வக்கில்லாத தமிழக அரசு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, அதன் வீரத்தை வெளிப்படுத்துகிறது. சவுமியாவை காரில் இருந்து இறங்க கூட, காவல் துறை அனுமதிக்கவில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 'அந்த சார்' உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை