காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஐ.நா.,வில் சவுமியா பேச்சு
சென்னை:பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, ஐ.நா., மனித உரிமை பேரவை கூட்டத்தில் பேசியதாவது:காலநிலை மாற்றம் என்பது ஒட்டு மொத்த மனித குலத்தையும், மிகவும் குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பெண்களை பாதிக்கக்கூடிய, அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலக பிரச்னையாகும். காலநிலை மாற்றத்தால் விவசாயம், சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற துறைகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாய தொழிலாளர்களில் கணிசமானோர் பெண்கள் என்பதால், அவர்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சுகாதார பாதிப்புகள், கடுமையாக பணி செய்து உடல் சோர்ந்து போதல் போன்ற பிரச்னைகளை, பெண்கள் எதிர்கொள்கின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால், பள்ளிகளின் கழிப்பறைகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவியர் தங்களின் பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண, அவர்களுக்கு கல்வி, சொத்துரிமை, முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.