மத்திய பட்ஜெட்டில் நிதி தெற்கு ரயில்வே அறிக்கை
சென்னை:தெற்கு ரயில்வேயில் நடக்கும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் நிதி தேவை குறித்து, வாரியத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், வரும் பிப்ரவரி, 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, ரயில்வேயின் கீழ் செயல்படும், 16 மண்டலங்கள் சார்பில், தங்கள் எல்லைக்கு உட்பட்ட ரயில் திட்டங்கள், மேம்பாட்டுப் பணிகள் நிலவரம் குறித்து, ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வே சார்பில், தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலவரம், புதிய திட்டங்கள், தேவையான நிதி குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: திண்டிவனம் - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புத்துார்; மொரப்பூர் - தர்மபுரி; தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை உட்பட, 10 புதிய பாதை திட்டங்களின் தற்போதைய நிலவரம், ஒன்பது அகலப்பாதை திட்டங்கள், ரயில் நிலையங்கள் மேம்பாட்டு பணி திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி உள்ளிட்ட விபரங்களை அனுப்பி உள்ளோம். வரும் மத்திய பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.