இன்ஸ்பெக்டர் போல போலி கையெழுத்து எஸ்.எஸ்.ஐ.,க்கு விதித்த தண்டனை நிறுத்தம்
சென்னை:குற்றப்பத்திரிகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கையெழுத்தை, போலியாக பதிவு செய்த சிறப்பு எஸ்.ஐ.,க்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. குடும்ப பிரச்னை தொடர்பாக, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும், திருவாரூரை சேர்ந்த பன்னீர்செல்வம் பிரதீபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2023ல் வழக்கு தொடர்ந்தார். இடைக்கால தடை
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு எதிராக, வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை மீறி, வலங்கைமான் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்; பன்னீர்செல்வம் பிரதீபனுக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்தனர். இதை எதிர்த்து, பன்னீர் செல்வம் பிரதீபன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், திருவாரூர் மாவட்ட எஸ்.பி., வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எதிராக, தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், குற்றப்பத்திரிகையில் இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்த, சிறப்பு எஸ்.ஐ., சங்கருக்கு, மூன்று மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சிறப்பு எஸ்.ஐ., சங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் வி.பி.ராமன், ஜி.சி.நெல்சன் பிரிட்டோ, காவல்துறை தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை, மோசடியாக பதிவு செய்ததை மேல்முறையீடு செய்தவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தள்ளி வைப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு, 'நோட்டீஸ்' வழங்கி, மோசடியாக கையெழுத்தை பதிவு செய்த சூழ்நிலையை விளக்க வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்ற, மனுதாரரின் கூற்றில் முகாந்திரம் உள்ளது. எனவே, மறு உத்தரவு வரும் வரை, மூன்று மாத சிறை தண்டனை விதித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. மனு குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்., 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.