மேலும் செய்திகள்
பா.ம.க. ராமதாஸ், அன்புமணி பகிரங்க சண்டை!
29-Dec-2024
சேலம்:''தமிழக வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் என்றால் அது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தான்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.சேலத்தில், பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது:கடந்த, 1996 சட்டசபை தேர்தலில் தனித்து நின்று, 4 எம்.எல்.ஏ.,க்களைப் பெற்றோம். அதில், சேலம் மாவட்டத்தில் இரு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் தனித்து நின்று வெற்றி பெற்ற மாவட்டத்தில், இன்று கூட்டணி சேர்ந்தும், 2 பேர் தான் உள்ளனர்; இது கட்சிக்கு வளர்ச்சி அல்ல. கட்சியில் கொள்கை, திட்டம் என எல்லாம் சிறப்பாக இருந்தும் ஏன் வளரவில்லை. அன்று இருந்த எதிர்பாராத உழைப்பு, இன்று இல்லை. போனில் அரசியல் செய்தது போதும். களத்துக்குப் போக வேண்டும். தனியே போட்டியிட்டாலும் வெற்றி பெறும்படி, கட்சியில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். ஒரு டி.எம்.சி., கொள்ளளவு உள்ள பனமரத்துப்பட்டி ஏரியை துார்வாரி சுத்தப்படுத்தாத துப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனர். அவர்கள், உயிர் தியாகம் செய்தது எதற்கு என்பதை மறந்துவிட்டனர். அவர்கள் கேட்ட இடஒதுக்கீட்டை தரமாட்டேன் என்கின்றனர். தமிழக வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் என்றால் அது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தான். பழனிசாமி கொடுத்த, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டையும், நீதிமன்றத்தில் வேண்டுமென்றே வாதாடாமல் விட்டு நீக்கம் செய்துள்ளனர்.உச்ச நீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடை கிடையாது என கூறிய பின்பும், ஸ்டாலினுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மனமில்லை. அவர்களை பொறுத்தவரை வன்னியர்கள் முன்னேறக்கூடாது. மக்கள் படிக்காமல், போதையில் இருந்தால் தான் அவர்களுக்கு ஓட்டு போடுவர். இதையெல்லாம் மறைத்துவிட்டு, மறைந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு, இரு நாட்களாக, மேடையில் பேச பயிற்சி கொடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால், இன்று ஸ்டாலினுடன் சண்டை போட்டாவது வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்று தந்திருப்பார். ஆனால், இன்று கேள்வி கேட்கக்கூட யாருமில்லை. வட தமிழகத்தில் அமைதி நிலவி வருகிறது என்றால் அதற்கு ராமதாஸ்தான் காரணம். இனி வரப்போகும் எல்லா ஆட்சியும் கூட்டணி ஆட்சி தான். இவ்வாறு அவர் பேசினார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த இரு நாட்களாக, முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் இடஒதுக்கீடு போராட்டத்தால், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, 21 பேர் தியாகத்தை பாராட்டும் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நேரத்தில், உள்ளூரில் இருந்தால் தேவையில்லாத சர்ச்சையில் சிக்க வேண்டும் என்பதால், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கட்சியினரை சந்திக்க புறப்பட்டனர். நேற்று முன்தினம் தர்மபுரியிலும், நேற்று சேலத்திலும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இருவரும் பங்கேற்றனர்.
29-Dec-2024