வன்னியர்களுக்கு எதிரான மனநிலை உள்ளவர் ஸ்டாலின் * அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை:'வன்னியர்களுக்கு எதிரான மனநிலையை கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை:விழுப்புரத்தில் தியாகிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அது மட்டுமின்றி, அதில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினர், இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவைக்கூட, முதல்வரிடம் அளிக்க விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலில் மணிமண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு, திறப்பு விழாவின்போது, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, உதவி கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனால் பாடம் நடத்தப்பட்டுள்ளது. ஊடகங்களுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது என்பன உள்ளிட்ட, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு தி.மு.க., அரசு பாசிச தன்மை கொண்டதாக மாறி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் போன்ற வன்னியர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள், எவ்வளவு தான் முட்டுக்கட்டைகளைப் போட்டாலும், அவை அனைத்தையும் முறியடித்து, வன்னியர்களுக்கான சமூக நீதியை ராமதாஸ் வென்றெடுத்துக் கொடுப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.