சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று காலை வீடு வீடாகச் சென்று, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார மற்றும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை, கடந்த 1ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து, மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு அநீதி இழைப்பதாகவும், அதற்கு எதிராக தி.மு.க., அரசு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். கூடவே, தமிழகத்தின் நலன் காக்க, அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்; அதற்கான அவசியம் என்ன என்பது குறித்தும் விவரிக்கின்றனர். பின், அனைவரும் ஒன்று திரண்டு, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றும் சொல்லி பிரசாரம் மேற்கொள்கின்றனர். தமிழகம் முழுதும் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு இந்த பிரசாரத்தை மேற்கொள்ள, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.அதன்படி, நேற்று காலை, சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில், வீடு வீடாகச் சென்ற முதல்வர் ஸ்டாலின், மக்களை நேரில் சந்தித்து, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் பற்றி எடுத்துரைத்தார். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆறு கேள்விகள் கொண்ட படிவத்தை மக்களிடம் கொடுத்தார். அதை ஸ்டாலின் முன்னிலையில், மக்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆறு கேள்விகளில் ஒன்றை மட்டும் கேட்டு, அவர் பதில் பெற்றார்.மக்களை நேரில் சந்தித்தது குறித்து, கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “நாம் எதையும் கூறாமலேயே, நமக்கு வழிகாட்டுவது போல் மக்கள் பதிலளித்தனர். பொதுமக்கள் மிகுந்த விழிப்போடு இருப்பதைக் கண்டு பெருமித உணர்வு தோன்றுகிறது,” என்றார். நேற்றைய பிரசார பயணத்தில், முதல்வருடன் அமைச்சர் சுப்பிரமணியன் சென்றார்.
படிவத்தில் கேட்கப்பட்டுள்ள ஆறு கேள்விகள்
1. எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழகத்தின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?2. மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெறவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை, நாம் தொடர்ந்து பெற வேண்டுமா?3. மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, 'நீட்' போன்ற கொடுமையான நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றில் இருந்து, தமிழகம் மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா?4. டில்லியின் அதிகாரத்திற்கு அடி பணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர்தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?5. இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியை வழங்க, அனுபவம்மிக்க ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா?6. அப்படியானால் நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும் தங்கள் குடும்பமும், 'ஓரணியில் தமிழ்நாடு' என, கரம் கோர்க்க விரும்புகிறீர்களா? இதில் 1, 2, 4 ஆகிய மூன்று கேள்விகள், அனைவரும் 'ஆம்' என்று பதிலளிக்கும் வகையிலும், கடைசி இரண்டு கேள்விகள், தி.மு.க., அரசை ஆதரிப்பவர்கள் மட்டுமே பதிலளிக்கும் வகையிலும் கேட்கப்பட்டுள்ளன. மூன்றாவது கேள்வி, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிரானது.
செயலியில் உறுப்பினர் சேர்க்கை
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற மொபைல் போன் செயலி வாயிலாக, தி.மு.க., உறுப்பினர்களை சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் மட்டுமே, இந்த செயலியில் உறுப்பினர்களை சேர்க்க முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, முதல்வர் ஸ்டாலினிடம் கேள்விகளை கேட்டு, பதில் பெற வழி செய்யப்பட்டுள்ளது.