உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10,000 முகாம் நடத்த முடிவு
சென்னை:'அரசு அலுவலர்கள் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று மனுக்களை பெறும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை, அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம், வரும் 15ம் தேதி, சிதம்பரம் நகராட்சியில் துவக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தம், வருவாய் துறை செயலர் அமுதா, நிதித்துறை செயலர் உதயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:பொதுமக்களாகிய உங்களின் குறைகளை தீர்க்க, அரசு அலுவலர்கள், உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களை பெறவுள்ளனர். அதைத்தொடர்ந்து நடக்கும், 10,000 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலமாக, ஊரக பகுதிகளில், 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில், 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.