மீண்டும் கட்சி பணி ஸ்டாலின் சுறுசுறுப்பு
சென்னை: சட்டசபை தேர்தல் பணிகளை துவக்கியுள்ள தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக, தி.மு.க., நிர்வாகிகளை, தனித்தனியாக சந்தித்து, ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை, 42 சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து கடந்த 27ம் தேதி வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின், கட்சிப் பணிகளை நேற்று துவக்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு நிர்வாகியையும், தனித்தனியாக அழைத்து, அவர்களின் கருத்துகளை பெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.