வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல்லாண்டுகளாக ஆண்ட திமுக, இதுவரைக்கும் நலன் காக்காமல் இருந்தார்களாக்கும்.
தமிழகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளில், அரசு மருத்துவமனைகளின் அன்றாட சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு வரும் நோயாளிகளை முகாம்களுக்கு அனுப்பும் நிலை தொடர்வதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. தமிழக மக்கள் பயன் பெறும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், கிராமப்புறங்களில் 46 சேவைகளும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளும் பெறும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், ஆதார், ரேஷன், வரி ரசீது, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்காக நடத்தப்படும் முகாம்களில், பொது மக்களுக்கு மயக்கம் போன்ற உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓரிரு செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளை, முகாம்களுக்கு திருப்பி விடுவதில் தான் கவனம் செலுத்துகின்றனர். இல்லையேல், 'பாராசிட்டமால்' போன்ற மாத்திரைகளை மட்டுமே வழங்கி, நாளை வரும்படி சொல்லி அனுப்புகின்றனர். அதேபோல, வாரந்தோறும் சனிக்கிழமைகளில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பொது மக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காகவும், அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களும், முகாம்களுக்கு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த இரண்டு திட்டங்கள் நடக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் அன்றாட சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது: இத்திட்டங்களுக்காக கூடுதல் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களையே, முகாம்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். இந்த நடவடிக்கையால், மருத்துவமனைகளின் அன்றாட சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் பயனடைந் தோர் என்ற எண்ணிக்கையை அதிகரிக்க, மருத்துவமனைக்கு வருவோரையும் முகாம்களுக்கு அனுப்புகின்றனர். மேலும், கர்ப்பிணியருக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து பெட்டகத்தையும் முகாம்களில் கொடுக்கின்றனர். ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை அளித்து வருகிறது. அங்கு, இரண்டுக்கும் மேற்பட்ட முகாம்கள், ஓரிரு நாட்களுக்கு மேல் நடக்கும் போது, குழந்தைகள், கர்ப்பிணியருக்கு தடுப்பூசி செலுத்துதல் உட்பட பல பணிகள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
பல்லாண்டுகளாக ஆண்ட திமுக, இதுவரைக்கும் நலன் காக்காமல் இருந்தார்களாக்கும்.