தீபாவளி பஸ்கள் தடையின்றி செல்ல தேசிய நெடுஞ்சாலைகளில் வசதி: அரசு போக்குவரத்து கழகங்கள் வலியுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தீபாவளி பண்டிகையின்போது, பஸ்கள் தடையின்றி செல்ல, நெடுஞ்சாலைகளில் போதிய வசதிகளை செய்து தர வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழகங்கள் வலியுறுத்தி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், பெரும்பாலான மக்கள், அரசு பஸ்களை நம்பி உள்ளனர். தமிழகம் முழுதும் 20,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே, 'நெடுஞ்சாலைகளில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; நீண்ட நாட்களாக நடக்கும் மேம்பால பணி இடங்களில், கூடுதலாக சாலைகள் விரிவாக்கம் செய்து, சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும்' என, அரசு போக்குவரத்து துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: உளுந்துார்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி பாதை கொண்டது. இந்த சாலையில், எந்த இடையூறும் இல்லாதபோது, பஸ்கள் பெரிய அளவில் தாமதம் இன்றி இயக்கப்படுகின்றன. ஆனால், மேல்மருவத்துார் - செங்கல்பட்டு இடையே கருங்குழி, படாளம், புக்கத்துறை என, மூன்று இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும், ஒரு கி.மீ., துாரம் சர்வீஸ் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த சாலைகள் குறுகியதாக இருப்பதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்கின்றன. சென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில், சில இடங்களில் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. புதிய பணிகளை தற்காலிகமாக, ஓரிரு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். பணிகள் நடக்கும் இடங்களில், சாலைகள் விரிவாக்கம் செய்து, கூடுதல் சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும். பஸ்களை எந்த பாதிப்புமின்றி இயக்க, போதிய சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆணையங்களிடம் கூறியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.