மேலும் செய்திகள்
மாநில அரசு மெத்தனம் ரயில் மேம்பால பணி தாமதம்
14-Aug-2025
சென்னை:திண்டிவனம் - செங்கல் பட்டு ரயில் பாதை அருகே, 35 கோடி ரூபாயில், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி, விரைவில் துவக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வேயில், ரயில் விபத்துகள், ரயில்வே 'கிராசிங்' விபத்துகள் என, இரண்டு வகையாக விபத்துகள் பிரிக்கப்பட்டுள்ளன. ரயில்களின் இயக்கத்தால் ஏற்படும் விபத்துகள் மற்றும் இறப்பு, தற்போது குறைந்து வருகிறது. ஆனால், வாகனங்களில் ரயில் பாதைகளை கடந்து செல்வது, மொபைல் போனில் பேசியபடி, ரயில் பாதை அருகே நடந்து செல்வது, சிக்னல் விதிகளை மீறுவது உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் கால்நடைகளும், ரயில்களில் சிக்கி இறக்கின்றன. எனவே, விபத்துகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்க, ரயில் பாதையையொட்டி, தடுப்பு சுவர் அல்லது இரும்பு தடுப்பு அமைக்கும் பணியை, தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், திண்டிவனம் - செங்கல்பட்டு ரயில் பாதை அருகே, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பாதையில், கவனக்குறைவாக செல்வதால், பொதுமக்கள் ரயில் மோதி இறக்கின்றனர். சென்னை கோட்டத்தில், தினமும் சராசரியாக நான்கு பேர் வரை இறக்கின்றனர். கால்நடைகளும் இறக்கின்றன. விபத்து ஏற்படும் 30 நிமிடங்கள் வரை, ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ரயில் பாதை அருகே தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. சென்னை - அரக்கோணம், கூடூர் தடத்தில், முக்கியமான இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே, தேர்வு செய்யப்பட்ட 43 கி.மீ., துாரத்துக்கு, ரயில்பாதை அருகில், இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகள், 35 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள், விரைவில் துவக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
14-Aug-2025