வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எந்தெந்த இடங்களில் இந்த முகாம்கள் நடக்கும் சாமி. இந்த இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு வந்து சேருவார்கள்.
சென்னை:'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், 625 முகாம்கள் நடத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை, சுய தொழில் கடனுதவி, நவீன தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் என, 10க்கும் மேற்பட்ட சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப, மாற்றுத்திறனாளிகளுக்கு, 25 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தேவை இருப்போர், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, இவற்றை பெறலாம். இது தவிர, 'நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், 125 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டசபையில் அறிவித்தார். இதை 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ், முகாம் நடத்தி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவி உபகரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 12, 13 தேதிகளில் சென்னையில், 'டெக் பார்ஆல்' இரண்டு நாள் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், 48 நிறுவனம் சார்பில் 200க்கும் மேற்பட்ட நவீன உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப, திறன் கண்ணாடி, சக்கர நாற்காலி; செயற்கை கை, கால் உட்பட, 40 நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்காக, தமிழகம் முழுதும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், 625 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், முகாமில் பராமரிப்பு உதவித்தொகை, புதிய அடையாள அட்டை, சுய தொழில் கடனுதவி, ஏற்கனவே வழங்கப்படும் உதவி உபகரணங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எந்தெந்த இடங்களில் இந்த முகாம்கள் நடக்கும் சாமி. இந்த இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு வந்து சேருவார்கள்.