UPDATED : மார் 30, 2013 11:04 AM | ADDED : மார் 30, 2013 10:55 AM
தூத்துக்குடி: பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இன்று மூட உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இங்கு வழங்கி வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சமீபத்தில் கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியேறிய புகாரை அடுத்து நடந்த போராட்டங்களின் எதிரொலியாக சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி - மதுரை ரோட்டில் ( சிப்காட் பகுதி ) அதாவது தூத்துக்குடி நகர் பகுதியில் இருந்து சுமார் 14 கி.மீட்டர் தொலைவில் இந்த ஆலை உள்ளது. இங்கு தாமிரம் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட ரசாயனத்தை கலந்து பிளாட்டினம், தங்கம் என பல்வேறு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலைக்கு கடந்த 1993 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. வட மாநிலத்தை சேர்ந்த அனில்அகர்வால் என்பவர் இதற்கு சேர்மன் ஆவார். இந்த ஆலை பல ஆயிரம் கோடி செலவில் துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரிடையாக உள்ளூர் மக்களுக்கு 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.
மக்களுக்கு இருமல், மூச்சு திணறல் :
இந்த ஆலை துவங்கும் முன்னரே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலக்ககட்ட போராட்டங்களை சந்தித்து வந்தது. ஆலைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ல் மூடும் உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்தது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் சென்று தடை பெற்று மீண்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 23 ம் கந்தக டை ஆக்ஸைடு வாயு வெளியேறியது. இதனால் சுற்றுப்பகுதி மக்கள் இருமல், மூச்சு திணறல், தலைசுற்றல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் ஸ்டெர்லைட்ஆலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு நடந்தது. இதில் வைகோ உள்ளிட்ட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். மின் இணைப்பு துண்டிப்பு :
இந்த ஆலை நிலவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. நச்சு வாயு வெளியானதை தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133ன்கீழ் ஏன், தொழிற் சாலையில் உள்ள கந்தக அமில ஆலையை மூடக் கூடாது என்று விளக்கம் கேட்டு கலெக்டர் ஆஷீஸ்குமார் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலையை மூட உத்தரவை நேற்று நள்ளிரவில் பிறப்பித்தது. இன்று காலை ஆர்.டி.ஓ., லதா. தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று அரசின் ஆணையை வழங்கி ஆலையை மூடும் நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்டமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த ஆலை மூடப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தூத்துக்குடி வணிகர்கள் பலரும் பட்டாசு வெடித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவை: இந்த ஆலையை திறப்பதா, மூடுவதா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநில அரசு மூடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. வைகோ வரவேற்பு: ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். நாசகார உருக்காலையை மூட 17 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தோம். ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்க்கத்தக்கது என கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளது.