தமிழகத்தில் பா.ம.க.,வில் பிரச்னை முற்றி இருப்பது போல, நாடு முழுவதுமே பல்வேறு மாநில கட்சிகளிலும், வாரிசுகளால் மோதல்களும் சமாதானங்களும் தொடர்கதையாகி வருகிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்- மகன் அன்புமணி இடையே நீடித்த பனிப்போர், சில மாதங்களாக பகிரங்கமாக வெடித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க. அணிக்கு சென்றிருந்தால் கட்சிக்கு 3ம், அ.தி.மு.க.,வுக்கு 7 வரையிலும் எம்.பி.,க்கள் கிடைத்திருப்பார்கள் என்பது ராமதாஸ் வாதம். தனது பேச்சை கேட்காமல், மகனும், மகளும் காலைப் பிடித்து கெஞ்சி, கதறி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து விட்டதாகவும் அன்புமணியை விளாசுகிறார் ராமதாஸ். ஆனால், சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,-பா.ஜ., இரண்டு கட்சிகளும் ஓரணியில் இருக்கும் நிலையில், பா.ம.க., அங்கு செல்வதில் என்ன சிக்கல் என்பதை இருவருமே விளக்கவில்லை. அன்புமணியின் சகோதரி மகனும், ராமதாசின் மகள் வழி பேரனுமான முகுந்தனை, இளைஞரணி பொறுப்புக்கு ராமதாஸ் நியமித்ததே, பிரச்னையில் ஆரம்பப்புள்ளி. இதுபோன்ற வாரிசு ரிமைப் போர், தமிழகத்துக்கு புதிதல்ல. சமீபத்தில் தான், ம.தி.மு.க.,வில் பெரிய பிரளயமே ஏற்பட்டு, கட்சி கூட்டத்தில் இருந்தே பொதுச்செயலர் வைகோவின் மகனும் எம்.பி.,யுமான துரை வைகோ வெளியேறினார். கட்சியின் மூத்த நிர்வாகி மல்லை சத்யாவை மையம் கொண்டு தந்தை, மகன் இருவருக்கும் இடையே புயல் அடித்தது. பின், இரு தரப்பிலும் சமாதானம் ஏற்பட்டு, சண்டை சுமூகமாக முடிந்தது. பிற மாநிலங்களிலும் நடக்கும் வாரிசுரிமை சண்டைகளில், முக்கியமானதாக தெலுங்கானாவில் இரண்டு முறை ஆட்சி செய்த பாரத் ராஷ்ட்ரிய சமிதியை சொல்லலாம். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், செயல் தலைவராக மகன் ராமாராவை நியமித்தது, மகள் கவிதாவை கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது. தந்தையை சுற்றி சாத்தான்கள் சூழ்ந்திருப்பதாக பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி உள்ளார். டில்லி மதுபான ஊழலில் தன்னையும் சேர்த்து சிறைக்குள் தள்ளியதால், பா.ஜ., மீது கடும் கோபத்தில் இருக்கும் அவருக்கு, சகோதரனுக்கு தலைமை பதவி கொடுத்ததே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மொத்த குடும்பத்தையும் திட்டி தீர்க்கிறார், கவிதா. கட்சியை பா.ஜ., பக்கம் கொண்டு செல்ல சந்திரசேகர ராவும் ராமாராவும் திட்டமிட, காங்., பக்கம் கொண்டு செல்ல கவிதா திட்டமிட, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி, பரிதவித்து நிற்கிறது.இதுபோலத்தான், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியிலும் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஷர்மிளாவுக்கு முட்டிக் கொள்ள, தனிகட்சி துவங்கினார் ஷர்மிளா. பின், காங்கிரஸில் இணைந்து, மாநில தலைவராகி விட்டார். இருவரின் சண்டைக்கு இடையே, கடந்த ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தார். இருந்தபோதும், இருவருக்கும் இடையேயான சண்டை, சொத்து சண்டையாக மாறி தொடர்கிறது. பீஹாரில் லாலு பிரசாத், தனது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் அடுத்த முகமாக இளைய மகன் தேஜஸ்வியை முன்னிறுத்திய நிலையில், மூத்த மகன் தேஜ் பிரதாப், அவரது பெயரை 'டேமேஜ்' செய்து வருகிறார். கட்சியின் முன்னாள் அமைச்சரின் மகளுடன் திருமணமாகி விவாகரத்தான, தேஜ் பிரதாப், திருமணத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, சமூக வலைதளத்தில் அந்த படத்தை பதிவிட, குடும்பத்தை விட்டே தேஜ் பிரதாபை துரத்தி விட்டார், லாலு பிரசாத். இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது லாலு கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என, அக்கட்சியினரே அச்சப்படுகின்றனர். இதற்கிடையே, சண்டைக்கு பின் சமாதானம் என கூடிக் குலவும் கட்சிகளும் இருக்கின்றன. மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியின் அரசியல் வாரிசாக, மருமகன் அபிஷேக் பானர்ஜியை கூறி வந்த நிலையில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, கட்சியில் இருந்தே அபிஷேக் நீக்கப்பட்டார். இந்நிலையில், வெளி நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பிய எம்.பி.,க்கள் குழுவில் அபிஷேக்கை சேர்க்குமாறு, மம்தாவே சிபாரிசு செய்யும் அளவுக்கு இருவருக்கிடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. உ.பி.,யில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி, அரசியல் வாரிசாக, மருமகன் ஆகாஷை, 2023ல் அறிவித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்தார். ஆனால், ஆகாஷின் சேட்டைகளை சகிக்க முடியாமல், அவரை நீக்கினார். சமீபத்தில், ஆகாஷின் பகிரங்க மன்னிப்பைத் தொடர்ந்து, மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார். ஆனாலும், யாரையும் அரசியல் வாரிசாக அறிவிக்க மாட்டேன் என மாயாவதி தெரிவித்துள்ளார். ஆனால், ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தில் எந்த சிக்கலும் இல்லாமல், மகன் நாரா லோகேஷுக்கு முடிசூட்ட தயாராகி விட்டார், கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. சமீபத்தில், கட்சியின் 43ம் ஆண்டு விழாவிலும், நிர்வாகிகள் அனைவரும் வாரிசுரிமைக்கு அங்கீகாரம் அளித்து விட்டனர். தெலுங்கு தேசம் மற்றும் ம.தி.மு.க., போலவே, சுமூகமான வாரிசுரிமை அறிவிப்பு, பா.ம.க.விலும் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.ஆனால், ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தில் எந்த சிக்கலும் இல்லாமல், மகன் நாரா லோகேஷுக்கு முடிசூட்ட தயாராகி விட்டார், கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. சமீபத்தில், கட்சியின் 43ம் ஆண்டு விழாவிலும், நிர்வாகிகள் அனைவரும் வாரிசுரிமைக்கு அங்கீகாரம் அளித்து விட்டனர். தெலுங்கு தேசம் மற்றும் ம.தி.மு.க., போலவே, சுமூகமான வாரிசுரிமை அறிவிப்பு, பா.ம.க.விலும் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. -நமது சிறப்பு நிருபர்-