உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரிய அலுவலகத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

மின் வாரிய அலுவலகத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

சென்னை : உதவி கணக்கு அலுவலர் பதவி உயர்வு வழங்கும் பட்டியலில், 26 பேர் விடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பினர், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக மின் வாரிய தலைமை அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் உள்ளது. 10 மாடி கட்டடம் உடைய அலுவலகத்தின், எட்டாவது மாடியில் நிர்வாகப் பிரிவு செயல்படுகிறது. அங்குதான் உதவியாளர் முதல் உதவி செயற்பொறியாளர் வரை இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. கணக்கு மேற்பார்வையாளராக பணிபுரிவோரில், 122 பேருக்கு உதவி கணக்கு அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டிய நிலையில், 96 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள, 26 பேருக்கு தகுதிக்கான பட்டியல் வரவில்லை எனக் கூறி, பதவி உயர்வு வழங்கவில்லை. இதை கண்டித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், எட்டாவது மாடியில் உள்ள பணியமைப்பு பிரிவு தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் கண்ணன் கூறியதாவது: விருப்ப இடமாறுதல், பதவி உயர்வு வழங்குவதில், வாரிய விதிகளை பின்பற்றுவதில்லை. விதிகளுக்கு எதிராக, அரசியல் குறுக்கீடுகளால், தவறான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போராட்டத்தை அடுத்து, பதவி உயர்வு வழங்கி வெளியிடப்பட்ட பட்டியல், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விடுபட்டவர்களை சேர்த்து, பதவி உயர்வு பட்டியலை வெளியிடுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி