கோடை மழையால் வாரியத்துக்கு லாபம்
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில், 22,000 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் இறுதியில் இருந்து, பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மின் தேவை, 17,000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை மழை பெய்தது.இதனால், நேற்றைய மின் தேவை 3,000 மெகா வாட் குறைந்து, 14,000 மெகாவாட்டாக இருந்தது. எனவே, மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளதால், செலவு மிச்சமாகி உள்ளது. கடந்த 2024 மே 2ல் மின் தேவை, 20,830 மெகா வாட் அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.