வேங்கைவயல் வழக்கு மூவருக்கு சம்மன்
புதுக்கோட்டை:வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், மார்ச் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக, போலீஸ்காரர் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தரப்பில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரிக்கும், புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர், மார்ச் 11ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தனித்தனியாக சம்மன் அனுப்பி உள்ளது.மேலும், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.