இளையராஜா மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
பதிப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக, இளையராஜா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், 'இளையராஜா மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், பதிவு ஒப்பந்தங்களை மீறியதற்காக, அந்நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக்கோரியும், 1.50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், 'சோனி' நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில், 2022ல் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, இளையராஜா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -