உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுசிலா, கவிஞர் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது

சுசிலா, கவிஞர் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது

சென்னை:தமிழக அரசு சார்பில், கவிஞர் மேத்தா, பின்னணி பாடகி சுசிலா ஆகியோருக்கு, 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்பட்டது.அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 2022 முதல் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி, 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டு 500 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்ற ஆரூர்தாசுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறப்பினமாக ஒரு பெண் திரை கலைஞருக்கும் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, 2023ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை விருதுகள் பெற, திரைப்பட பின்னணி பாடகி சுசிலா, சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மு.மேத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு விருதுடன், தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, நினைவுப் பரிசு ஆகியவற்றை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். அப்போது பாடகி சுசிலா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதி, தான் பாடிய, 'காகித ஓடம்' பாடலின் சில வரிகளையும், தமிழ்த்தாய் வாழ்த்தின் சில வரிகளையும், முதல்வருக்கு பாடி காட்டினார். அதை கேட்டு மகிழ்ந்த முதல்வர், அவரது கைகளை பற்றி, 'உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்' என்றார்.நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலர் முருகானந்தம், செய்தித் துறை செயலர் ராஜாராமன், இயக்குனர் வைத்திநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

naadodi
அக் 05, 2024 01:00

காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம் - பி.சுசீலா பாடல் மறைமுகமாய் ஏதோ சொல்கிறதா?


புதிய வீடியோ