நாட்டின் மொத்த பெண் பணியாளர்களில் 41 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்
சென்னை:   சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த கவர்னர் உரையில் கூறப்பட்டு உள்ளதாவது:தமிழக மக்கள் தொகையில் 2.2 சதவீதத்தினர் மட்டுமே ஏழைகளாக இருப்பதாக  கூறப்படுகிறது. இது, தேசிய சராசரியான 14.9 சதவீதத்தை விட மிகவும் குறைவு. இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை மாநில அரசு துவங்க உள்ளது. சிறப்பான நிர்வாகம் 
மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்று நீரில், தமிழகத்திற்கு உரிய நியாயமான பங்கை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை, இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இணைய வழி குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன புலனாய்வு முறைகளை பயன்படுத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதில், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக காவல் துறை எடுத்து வருகிறது. மாநிலத்தில் அமைதி நிலவவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக, தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பெண் பணியாளர்களில், 41 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர். மாநிலத்தில் நிலவும் அமைதியான வளர்ச்சிக்கு உகந்த சூழலால், தமிழகத்தை நோக்கி புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன. முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 2021 முதல் இதுவரை, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான தனியார் முதலீட்டு திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சவால்கள் அதிகரிப்பு
செயற்கை நுண்ணறிவு துறையில், ஒரு முதன்மையான இடத்தை தமிழகம் பெற வேண்டும் என அரசு விரும்புகிறது. இதற்காக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை, இந்த அரசு துவங்கியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழகத்தை இது நிலைநிறுத்தும். உலகத் தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு திட்டங்களை, தலைசிறந்த மேலாண்மை நடைமுறைகளை கொண்டு செயல்படுத்துவதற்கு, தமிழக மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை அரசு உருவாக்கியுள்ளது. இது, மாநிலம் முழுதும் பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்துக்கு உதவும். கடந்த மூன்று ஆண்டுகளில், 2,578 புதிய பஸ்கள் கொள்முதல் செய்து இயக்கி வரும் நிலையில், மேலும், 6,104 பஸ்கள் வாங்கும் பணி நடந்து வருகிறது. மின் துறையில் ஏற்படும் இழப்புகளை குறைக்கவும், அதன் செயல்திறனை மேம்படுத்தவும், குறிப்பிடத்தக்க பல சீர்திருத்தங்களை குறுகிய காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் புயல், பெருமழை, வரலாறு காணாத வெள்ளம் உள்ளிட்ட தொடர் இயற்கை பேரிடர்களால், தேவையான கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதில் சவால்கள் அதிகரித்துள்ளன. அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களால், அண்மை காலங்களில் கணிசமாக பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் ஓர் ஆண்டுக்கான ஒட்டுமொத்த மழை, 24 மணி நேரத்திற்குள் பெய்துள்ளது. இத்தகைய காலநிலை மாற்றங்கள், மக்களின் வாழ்வாதாரம், மாநிலத்தின் கட்டமைப்புகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.