தரவரிசையில் முன்னேறும் தமிழக விமான நிலையங்கள்: வசதிகளை அதிகரித்தால் பொருளாதாரம் உயரும்
மாநிலங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்தில், தமிழகம் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. ஓடுபாதை விரிவாக்கம், உள்கட்டமைப்பு, புதிய சேவைகள் போன்ற வசதிகள் அதிகரித்தால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் கணிசமாக உயரும்.இந்தியாவில் உள்நாடு மற்றும் சர்வதேசம் என, 159 விமான நிலையங்கள் உள்ளன. டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற விமான நிலையங்கள், தனியார் பங்களிப்புடன் அசுர வளர்ச்சி அடைந்துஉள்ளன.முயற்சி
இந்தியாவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும், பயணியரின் சேவைகளை நவீனப்படுத்தவும், மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.அதற்காக, நாட்டில் இயங்கும் விமான நிலையங்கள், 'கிளஸ்டர் 1, 2, 3' என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றின் தரத்தின் அடிப்படையில், 1, 2, 3 என பிரிக்கப்படுகிறது.அதாவது, அந்த நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணியர் எண்ணிக்கை அடிப்படையில், அவை வகைப்படுத்தப்படுகின்றன. கிளஸ்டர் தரவரிசை அடிப்படையில் தான், விமான சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய, மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது.தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை விமான நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களாகவும், சேலம், துாத்துக்குடி விமான நிலையங்கள் உள்நாட்டு நிலையங்களாகவும் செயல்படுகின்றன.வேலுார் மற்றும் நெய்வேலியில், மத்திய அரசின், 'உடான்' திட்டம் வாயிலாக, விமான நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.தமிழகத்தில், பயணியர் அதிகளவில் வந்து செல்லும் விமான நிலையங்களில், சென்னை முதல் இடத்திலும், கோவை, திருச்சி, மதுரை அதற்கு அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.காஞ்சிபுரத்தில் உள்ள பரந்துாரில், 2030ம் ஆண்டுக்குள், 10 கோடி பயணியரை கையாளும் வகையில், புதிய விமான நிலையம் அமைக் கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.இப்படி விமானப் போக்குவரத்தில், தமிழகம் கணிசமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதிலும் மற்ற மாநிலங்களைவிட, 'கிளஸ்டர்' தரவரிசையில், தமிழக விமான நிலையங்கள் அனைத்தும் முன்னேறி உள்ளன. அவை, 1, 2 என்ற இடத்தில் உள்ளன.இதுகுறித்து, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது:விமானப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, தமிழகத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கல்வி, சுற்றுலா, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக, வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் தமிழகம் வருகின்றனர்.வளர்ச்சி பாதை
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களும் வளர்ச்சி பாதையில் செல்லத் துவங்கி உள்ளன. விமான நிலைய ஆணையம், தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சர்வதேச சேவைகளை அதிகரிக்க வேண்டும்.ஓசூர் விமான நிலையமும் செயல்பாட்டிற்கு வந்தால், பல கோடி ரூபாய் பொருளாதாரம் தமிழகத்துக்கு கிடைக்கும். நிலம் கையகப்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற விஷயங்களில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், இங்குள்ள விமான நிலையங்களின் தரம் மேலும் உயரும்.உடான் திட்டத்தில், தமிழகத்தில் விமானப் போக்குவரத்து இல்லாத நகரங்களை கண்டறிந்து, நிலையம் அமைத்தால் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆண்டுக்கு, 3 கோடி பயணியரை, தமிழக விமான நிலையங்கள் கையாண்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
'கிளஸ்டர் 1'
ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் மேல் பயணியரை கையாளும் விமான நிலையங்கள் இதில் இடம்பெறும். அதிக வருவாய் மற்றும் சர்வதேச போக்குவரத்தில் முதன்மையானதாகவும், இந்த நிலையங்கள் திகழும். இந்த பிரிவில், தற்போது சென்னை மட்டுமே உள்ளது.
'கிளஸ்டர் 2'
ஆண்டுக்கு, 1 லட்சத்தில் இருந்து, 10 லட்சம் வரை பயணியரை கையாளும் விமான நிலையங்கள், இதில் இடம்பெறும். முன்னேறி வரும் விமான நிலையங்களாகவும் இவை கருதப்படும். திருச்சி, கோவை, மதுரை, துாத்துக்குடி, சேலம் இதில் அடங்கும்.
'கிளஸ்டர் 3'
சேலம் விமான நிலையம் இருந்து வந்தது. அதன் பயணியர் வருகை, 1.3 லட்சமாக பதிவானதால், கிளஸ்டர் 2 வகைக்கு, தற்போது முன்னேறியுள்ளது.- நமது நிருபர் -