பயிர்க்கடன் வழங்க ரூ.4,000 கோடி நபார்டு வங்கியிடம் கேட்கிறது தமிழகம்: குறைக்காமல் கொடுக்குமாறு கடிதம்
சென்னை:தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க, 4,000 கோடி ரூபாயை முழுதுமாக தர, 'நபார்டு' வங்கியை அறிவுறுத்துமாறு, மத்திய கூட்டுறவு அமைச்சகத்துக்கு தமிழக கூட்டுறவு துறை கடிதம் எழுதியுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவை, மக்களிடம் இருந்து முதலீடுகளை திரட்டுவதுடன், 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடன் வாங்குகின்றன. இந்த நிதியில் விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. கடனை குறித்த காலத்தில் அடைத்து விட்டால், வட்டி முழுதையும் அரசு ஏற்கிறது. நடப்பு நிதியாண்டில் பயிர்க்கடன் பிரிவில், 17,000 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 4,000 கோடி ரூபாய் கடன் வழங்க, நபார்டு வங்கியை அறிவுறுத்துமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நபார்டு வங்கியிடம் இருந்து, 4.50 சதவீத வட்டியில் கடன் வாங்கப்பட்டு, அதனுடன் சிறிது கூடுதல் வட்டி சேர்த்து, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் பயிர் கடனாக, 4,000 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில், நபார்டிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் தான் கிடைத்தது. முன்னுரிமை துறைகளுக்கான கடன் ஒதுக்கீட்டை குறைக்க, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றும், அதற்கு ஏற்ப, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பயிர்க்கடன் குறைக்கப்பட்டு உள்ளது என்றும், நபார்டு அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்தாண்டில் 4,000 கோடி ரூபாயை முழுதுமாக வழங்குமாறு நபார்டு வங்கிக்கும், நபார்டு வங்கியை அறிவுறுத்துமாறு, மத்திய கூட்டுறவு அமைச்சகத்துக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, நபார்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு, குறைந்த வட்டியில் பயிர்க்கடன் வழங்குவதற்கு நபார்டுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதுதவிர, நபார்டு நிதியில் இருந்தும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு, 7 சதவீதம் வட்டி. இது, தொடர்ந்து மாறக்கூடியது.இதனால், மாநில கூட்டுறவு வங்கிகள், மத்திய அரசு தரும் நிதியில் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெறவே விரும்புகின்றன. கடந்த இரு ஆண்டுகளாக, மத்திய அரசு குறைந்த வட்டியில் தரும் கடனுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து விட்டது. இதனால், தமிழகம் உட்பட அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளுக்கும், நபார்டில் இருந்து கடன் வழங்குவது குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.எத்தனை பேர்? தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில், 2024 - 25ம் நிதியாண்டில், 17.37 லட்சம் பேருக்கு, 15,692 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.