உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டசபை இன்று கூடுகிறது 17ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது 17ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் இன்று கூடுகிறது. கரூர் துயர சம்பவம் உட்பட பல்வேறு பிரச்னைகளை, சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து, அவர் அளித்த பேட்டி: சட்டசபை கூட்டத்தை, இன்று முதல் 17ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று காலை 9:30 மணிக்கு சட்டசபை கூடும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் கணேசன், இ.கம்யூ., மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கும், கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். நாளை மீண்டும் சட்டசபை கூடி, கூடுதல் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம், 16ம் தேதி வரை நடக்கும். விவாதத்திற்கு, 17ம் தேதி பதில் அளிக்கப்படும். காசா தாக்குதல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றுவது எப்போது என்பது குறித்து, முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். சபை நடக்கும் மூன்று நாட்களும் கேள்வி நேரம் உண்டு. மதியத்துக்குள் சபை நிகழ்ச்சிகள் முடியும். பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பதவி மாற்றம், நீக்கம் தொடர்பான கடிதம், என் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை