ஓசூர் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழகம் முடிவு
சென்னை: ஓசூர் - பெங்களூரு பொம்மசந்திரா இடையே, மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர முடிவு செய்துள்ளது. கர்நாடகா தலைநகர் பெங்களூருக்கு அருகில், தமிழகத்தின் ஓசூர் நகரம் அமைந்திருப்பதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள், இரு நகரங்களுக்கும் பயணிக்கின்றனர். தொழில் நகரமான ஓசூரையும், பெங்களூரையும் இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல் படுத்த, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரித்தது; இது, கர்நாடகா மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அடுத்தகட்ட பணிகள் இன்னும் துவங்கவில்லை. இதற்கிடையே, இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. 'தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை' என, அது அறிவித்துள்ளது. கல்வி, தொழில் போன்ற பணிகள் காரணமாக, ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழக மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, ஓசூரில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதால், தொழில் வளர்ச்சி ஏற்படுவதோடு, ஐ.டி., நிறுவனங்கள் அதிகளவில் வரவும் வாய்ப்புள்ளது. இதனால், இந்த மெட்ரோ ரயில் திட்டம், கர்நாடகாவை விட, தமிழகத்துக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகா மாநிலம் பொம்மசந்திராவில் இருந்து அத்திபள்ளி வழியாக, ஓசூருக்கு, 22 கி.மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, அம்மாநில அரசிடம் கடந்த ஜூலையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில், 11 கி.மீ., மற்றும் கர்நாடகாவில், 12 கி.மீ., என, இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் இருக்கும். இந்த திட்டத்தின் மதிப்பு, 5,400 கோடி ரூபாய். இந்த திட்டம், தமிழகத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவே, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திடம், தமிழக அரசு வாயிலாக தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான போக்கு வரத்து மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். ரூ.400 கோடியில் ஓசூரில் 'டைடல் பார்க்' ஓசூருக்கு அருகில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளது. அங்கு , உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, ஓசூரில், 400 கோடி ரூபாயில் டைடல் பார்க் கட்ட, அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, இந்தாண்டு பட்ஜெட்டில் வெளியானது. டைடல் பார்க் வடிவமைப்பு தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை பணிகளுக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டைடல் பார்க் நிறுவனம் சமீபத்தில், 'டெண்டர்' கோரியது. இதில், 'வொயண்ட்ஸ்' என்ற தனியார் நிறுவனம் தேர்வானது. தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ' ஓசூர் டைடல் பார்க் வடிவமைப்பு பணிக்கான ஒப்பந்த நிறுவனம், வரைவு அறிக்கை வழங்கியுள்ளது. ஓசூரில் பல்வேறு வசதிகளுடன், ஐந்து லட்சம் சதுர அடியில், 10 மாடியில் டைடல் பார்க் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது' என்றார்.