உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25 லட்சம் இலவச காஸ் இணைப்பு 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்

25 லட்சம் இலவச காஸ் இணைப்பு 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்

சென்னை:நாடு முழுதும் ஏழை மக்களுக்கு, 25 லட்சம் இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட இருப்பதில், தமிழகத்திற்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 2016 மே 1ல் துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, காஸ் அடுப்பு, டிபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர், முதல் சிலிண்டர் ஆகியவற்றின் செலவை, மத்திய அரசு ஏற்கிறது. இது தவிர, சிலிண்டர் வாங்கும்போது, அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. பிரதமரின் இலவச திட்டத்தில் தமிழகத்தில், 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, உஜ்வாலா திட்டத்தின் கீழ், 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், 10 சதவீதம் அதாவது, 2.50 லட்சம் இணைப்புகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக வழங்கப்பட உள்ள 25 லட்சம் காஸ் இணைப்புகளில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இணைப்பு என்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. பல மாநிலங்களில் உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள், இரண்டாவது, மூன்றாவது சிலிண்டரை கூட வாங்காமல் உள்ளனர். இதற்கு ஏழ்மை நிலையும், சிலிண்டர் பயன்படுத்த விரும்பாததும் காரணம். தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. எனவே, அதற்கு ஏற்ப, காஸ் இணைப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி