| ADDED : டிச 05, 2025 02:49 AM
கூடலுார்: மதுரையில் இருந்து தேக்கடிக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ் தேக்கடி வரை செல்லாமல் இடையிலேயே திருப்பி வரும் நிலை தொடர்வதால் தமிழகத்திற்கான அடுத்த உரிமையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணை அப்பகுதியில் இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் தேக்கடி செல்கின்றனர். மேலும் அணைப்பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக தொழிலாளர்கள் அடிக்கடி சென்று திரும்புகின்றனர். இதற்காக கம்பத்தில் இருந்து குமுளி வரை 2 தமிழக அரசு டவுன் பஸ்களும், மதுரையில் இருந்து குமுளி வரை காலை, மாலை இரு நேரங்களில் வரும் வகையில் 2 தொலைதூர பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதில் சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் குறைவு எனக் காரணம் காட்டி 2 டவுன் பஸ்களையும் இயக்காமல் நிறுத்தினர். தற்போது மதுரையில் இருந்து காலை 10:30 மணி, மாலை 4:15 மணிக்கு தேக்கடிக்கு வந்தடையும் வகையில் 2 டிரிப்புகள் இயக்கப்படுகின்றன. ஆனால் பல நாட்களாக தேக்கடி வரை பஸ்கள் செல்லாமல் 2 கி.மீ-க்கு முன்னதாக உள்ள தமிழக ஆய்வாளர் மாளிகை வரை மட்டுமே சென்று திரும்புகின்றன. சில நாட்களாக அதற்கும் முன்னதாக 3 கி.மீ., துாரமுள்ள அம்பாடி ஓட்டல் வரை மட்டுமே வந்து திரும்பிச் செல்கின்றன. தினந்தோறும் இந்த பஸ்சை நம்பி லோயர்கேம்பில் இருந்து தேக்கடி செல்பவர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குமுளியில் இருந்து தேக்கடி வரையுள்ள ரோட்டின் உரிமை, தேக்கடி ஏரியில் மீன் பிடிக்கும் உரிமை, அணையில் தமிழக போலீசார் பாதுகாப்பிற்கு இருந்த உரிமை, தாண்டிக்குடியில் நீர்மட்ட அளவு எடுக்கும் உரிமை ஆகியவை பறிபோயுள்ளன. தேக்கடி வரை தமிழக அரசு பஸ் செல்லாமல் இடையிலேயே திருப்பி வருவதால் தேக்கடி வரை பஸ்கள் இயக்கும் உரிமையும் பறிபோகும் அபாயம் உள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.