ஓட்டுப்பதிவு இயந்திரம் வாங்க நிதி தர தமிழக அரசு தாமதம்
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டில், அரசு தாமதித்து வருவதாக, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. அதில், ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊரக உள்ளாட்சிகளில் பயன்படுத்தும் வகையில், கூடுதல் வசதிகளுடன் கூடிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 'பெல்' நிறுவனம் வடிவமைத்துள்ளது. அவற்றை வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில், தமிழக அரசு கால தாமதம் செய்து வருவதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க, ஓராண்டுக்கு மேலாக அரசிடம் நிதி கேட்டுள்ளோம். ஆனால், தாமதமாகி வருகிறது. அரசின் நிதி ஆதரவை பொறுத்து, எவ்வளவு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்குவது என முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.இதுகுறித்து ஊரக வளர்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்காக, 70 முதல், 100 கோடி ரூபாய் வரை, மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும்,'' என்றனர்.