உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 16 பதக்கங்கள் வென்றும் பலன் இல்லை வாழ்த்து கூட சொல்லாத தமிழக அரசு

16 பதக்கங்கள் வென்றும் பலன் இல்லை வாழ்த்து கூட சொல்லாத தமிழக அரசு

சென்னை:''மலேஷியாவில் நடந்த ஆசிய --- பசிபிக் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றபோதிலும், எங்களுக்கு தமிழக அரசு வாழ்த்து கூட சொல்லவில்லை,'' என, காது கேளாதோர் பிரிவு விளையாட்டு வீரர் - வீராங்கனையர் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை, 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், மலேஷியாவில் நடந்தன. 21 நாடுகள் பங்கேற்ற போட்டியில், இந்தியா முதலிடம் பெற்றது. அதில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற தமிழக வீரர் - வீராங்கனைகள், முதன் முதலாக, ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கங்கள் வென்றனர். சென்னை, கன்னியாகுமரி, கடலுார், சேலம், ஈரோடு, திருச்சி, தேனி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரியங்கா, சுபஸ்ரீ, ஹரிணி, சமீஹா பர்வின், மணிகண்டன், ராக்கப்பன், வினித், சுதன், கார்த்திக், சாந்தனு ரவி, யாஷின் என, 11 பேர் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.சென்னையில் அவர்கள் அளித்த பேட்டி:நாட்டிற்கும், தமிழகத்திற்கும் விளையாடி பதக்கம் வென்று பெருமை சேர்த்த எங்களுக்கு, தமிழக அரசு வாழ்த்து கூட சொல்லவில்லை என்பது வேதனையாக உள்ளது. காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருந்தும், தேசிய, உலக அளவில் பல சாதனைகள் செய்து வரும் எங்களை, அரசு புறக்கணித்து வருகிறது. தேசிய அளவில் வெற்றி பெறும் சக வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை கூட எங்களுக்கு வழங்காதது ஏன்? கடந்த, 2021 முதல் உலக போட்டி, காது கேளாதோருக்கான, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறோம். தற்போது, பதக்கம் வென்று இருக்கிறோம்; அதற்கான பலனும் இல்லை. எங்கள் தாய், தந்தையின் கூலித்தொழில் வருமானத்தில் தான், நாங்கள் இந்த நிலைக்கு வந்துள்ளோம். நாங்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பலமுறை விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தான், எங்கள் எதிர்காலம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறியதாவது:விளையாட்டு வீரர்கள் வெளிநாடு செல்வதற்கான செலவுத்தொகையை, தமிழக அரசு தான் வழங்கியது. அவர்கள் வெற்றி பெற்று, தமிழகம் திரும்பி இருந்தாலும், இன்னும் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. அவை கிடைத்ததும், அவர்களுக்கான உயரிய ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும். இதுவரை அவர்கள் யாரும் எங்களை வந்து சந்திக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gururaj Kamaraj
ஜன 29, 2025 12:55

வாழ்த்துக்கள்


Saravanan D
ஜன 29, 2025 06:59

Wow what a proud moment Achievers! Congratulations to all 10 of you and your coach and parents. This is not an easy and simple one. You have set a great example to the society. Very inspiring. Keep up the great momentum.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை