உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் தனித்தே செயல்படும்: அமைச்சர் மா.சு., தகவல்

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் தனித்தே செயல்படும்: அமைச்சர் மா.சு., தகவல்

சென்னை:“தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம்' திட்டம் தனித்தே செயல்படும். மத்திய அரசு நிபந்தனைகளை தளர்த்தினால் இணைந்து செயல்படுவோம்,” என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டம் 2021ல் இருந்து செயல்பாட்டில் உள்ளது. சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன், முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவ செலவை, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை, தமிழக அரசு ஏற்கிறது. இந்த திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 3.57 லட்சம் பேர் விபத்து காய சிகிச்சையை இலவசமாக பெற்றுள்ளனர். அதற்காக அரசு, 318.89 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இந்நிலையில், 'நாடு முழுதும், சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு, உடனடி சிகிச்சை கிடைக்க, 1.50 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவு கட்டணம் ஏற்கப்படும்' என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுபோன்ற திட்டம், ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம் தமிழக திட்டத்துடன் இணைக்கப்படுமா அல்லது இரண்டும் தனித்தனியே செயல்பாட்டில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:சாலை விபத்துகளில் சிக்குவோரின் மருத்துவ செலவிற்கு, 1.50 லட்சம் ரூபாயை, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், விபத்து நடந்த முதல் 3 மணி நேரத்தில், வழக்குப்பதிவு உள்ளிட்ட ஏழு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தில், அவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.விபத்தில் எந்த மாநிலத்தவர், நாட்டினர் பாதிக்கப்பட்டாலும், உடனடியாக எவ்வித ஆவணமுமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு, பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். அதற்காக, 2 லட்சம் ரூபாயை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசின் நிபந்தனைகளுடன் சேர்த்து, இத்திட்டத்தை செயல்படுத்தினால் பயனடைவோர் எண்ணிக்கை குறையும்.அதேநேரத்தில், மத்திய அரசின் நிபந்தனைகளை தளர்த்த கோரிக்கை வைக்கப்படும். எதிர்பாராத விபத்துகளில் சிக்குவோருக்கு, மேலும் அழுத்தம் கொடுக்கும் நிபந்தனைகளை மத்திய அரசு தளர்த்தினால், அத்திட்டத்துடன் இன்னுயிர் காப்போம் திட்டம் இணைந்து செயல்படும். அதுவரை, தனித்தே செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை