உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க தயாரிப்பு குளிர்பானங்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு

அமெரிக்க தயாரிப்பு குளிர்பானங்களை புறக்கணிக்க தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு

சென்னை: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால், நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு,ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அமெரிக்காவுக்கு பதிலடிதரும்வகையில், அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும்குளிர்பானங்களை புறக்கணிப்பதாக, தமிழக ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. நம் நாட்டில் இருந்து ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கடல் உணவு பொருட்கள் உள்ளிட்டவை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்கு, 31 சதவீதமாக உள்ளது. இந்திய வேளாண் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் கால் பதிக்க, அமெரிக்கவால் முடியவில்லை. சோளம், சோயாபீன்ஸ், ஆப்பிள், பாதாம் பருப்பு மற்றும் எத்தனால் மீது, இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் என, அமெரிக்கா வற்புறுத்தியது; அதை நம் நாடு ஏற்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டில் இருந்து, தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களை புறக்கணிக்கப் போவதாக, தமிழக ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதேபோல், நம் நாட்டில் போக்குவரத்து உட்பட பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களை புறக்கணிக்குமாறு, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, தமிழக ேஹாட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியதாவது: அமெரிக்காவை சேர்ந்த, 'பெப்சி, கோககோலா' போன்ற நிறுவனங்கள், நம் நாட்டில் குளிர்பானங்களையும், குடிநீரையும் விற்கின்றன. நம் நாட்டை சேர்ந்த நிறுவனங்களே தரமான குளிர்பானங்கள், குடிநீரை தயாரித்து விற்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி தரும் வகையில், நம் நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இனி, அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்களை புறக்கணிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இரவு, 10:00 மணிக்கு மேல் உணவகங்கள் திறக்க, போலீசார் அனுமதி மறுக்கின்றனர். சிறிய ஹோட்டல்களுக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது. இதிலிருந்து, தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். அமெரிக்கா வரி விதிப்பு, ஹோட்டல் தொழில்களை பாதிக்காது. இருப்பினும் நாங்கள் அரசுக்கு உதவும் விதமாக, வெளிநாட்டு குளிர்பானம் மற்றும் உணவுகளை தவிர்த்து, உள்ளூர் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். மக்களிடம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை