தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் உதயமானது
சென்னை:தமிழகம் முழுதும் உள்ள, அனைத்து தனியார் பள்ளி சங்கங்களையும் இணைத்து, 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' உருவாக்கப்பட்டு உள்ளது என, அதன் மாநில தலைவர் அரசகுமார் தெரிவித்தார். அவரது பேட்டி:தமிழகம் முழுதும், 12,000க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும், பல்வேறு சங்கங்களில் இணைந்து செயல்பட்டன. இவற்றை ஒருங்கிணைத்து, மாநில அளவில் ஒரே சங்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து சங்கங்களையும் கலைத்து விட்டு, 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் ஒரே சங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, தனியார் பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதே சங்கத்தின் நோக்கம். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பிற்கு, பாதுகாப்பு சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளின் தேவைகளை, பூர்த்தி செய்வதற்கு, அரசு சார்பில், வல்லுநர் குழு அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள தொடர் அங்கீகாரத்தை, உடனடியாக வழங்க வேண்டும். தகுதியான தனியார் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளோம். இவ்வாறு அரசகுமார் கூறினார்.