உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை மத்திய அரசு வெளியிட தமிழகம் கோரிக்கை

 பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை மத்திய அரசு வெளியிட தமிழகம் கோரிக்கை

சென்னை: 'பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின் பார்லிமென்ட் விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: முத்தரையர் வம்சத்தின், சிறந்த குறுநில மன்னர் பெரும் பிடுகு முத்தரையர். கலை மற்றும் விவசாயத்தின் பாதுகாவலராக போற்றப்படுகிறார். நார்த்தாமலை மற்றும் காவிரி வடகரையில், பல இடங்களில் உள்ள கல்வெட்டுகள், அவரது ஆட்சி, கோவில் கட்டுமானங்கள், பாசன பணிகள் குறித்து சான்றுகள் பகிர்கின்றன. அவரது பாசன பணிகள், இப்பகுதியை தானிய களஞ்சியமாக மாற்றின. பெரும்பிடுகு என்பதற்கு, 'மாபெரும் இடி' என்று பொருள். இந்த பட்டம், அவரது சமகாலத்தவர்கள் இடையே ஏற்படுத்திய பிரமிப்பையும், மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில், நாட்டுப்புற பாடல்களும், கோவில் திருவிழாக்களும், அவரது நினைவை உயிரோடு வைத்துள்ளன. பெரும்பிடுகு முத்தரையருக்கு, நினைவு தபால் தலை வெளியிடுவதன் வாயிலாக, தேசிய கட்டுமானத்திற்கு, ஆரம்ப கால தமிழ் மன்னர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படும். தமிழ் அரசியல் மற்றும் பண்பாடு குறித்து, இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படும். நினைவு தபால் தலை வடிவமைப்பதற்கு தேவையான ஆவணங்கள், நிபுணர் ஆலோசனைகள் மற்றும் வடிவமைப்பு உள்ளீடுகள் உட்பட தேவையான ஒத்துழைப்புகளை வழங்க, தமிழக அரசு தயாராக உள்ளது. எனவே, மத்திய அரசிடம் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி