இறந்தோரை வைத்து அற்ப அரசியலை த.வெ.க., செய்கிறது: ஆர்.எஸ்.பாரதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'இறந்தோரை வைத்து, அற்ப அரசியல் செய்கிறது த.வெ.க.,' என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி கூறினார். அவரது அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்ததும், எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுடன், உறுதுணையாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உடனே நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. உயர் நீதிமன்றம் அமைத்த, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் நடந்து வருகிறது. இப்படி அனைத்து விசாரணைகளும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையோடும் நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில், இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேசமயம் தற்போது வெளிவரும் உண்மைகள், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும், நீதிமன்றத்தையே ஏமாற்றும் வகையில் எதிர் தரப்பினர் செயல்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது, இறந்தவர்களை வைத்து, தங்களின் அரசியல் ஆதாயங்களைத் தீர்த்துக் கொள்ள எதிர்க்கட்சியினரும், புதுக்கட்சியினரும் முயற்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது நீதிமன்றத்தை மட்டுமல்ல, தமிழக மக்களையும் ஏமாற்றும் அற்ப செயல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.